ஒரு முறைபார்த்தால் மறுமுறை பார்க்க தூண்டும் ஜனகன் மகள் சீதை போல பேரழகி சுகி.
கடவுள் அழகை அவளுக்கு மணிமேகலையின் அமுதசுரபி போல வற்றாமல்  அள்ளிக்கொடுத்திருந்தார்.
 ஆனால் பசங்க யாரும் அவளை திரும்பி பார்கவே பயப்படுவார்கள்.
சின்னத்தம்பி படத்தில் நந்தினியின்  அண்ணன்கள் போல அவள் குடும்ப பின்ணணி அப்படி.
 சுகி வகுப்பில் படிக்கும் மாணவர்கள் முதல் உயர்தரம் படிக்கும் மாணவர்கள் வரை பலருக்கு அவள் மேல் இதயம் பட முரளி போல சொல்லாமல் காதல் இருந்தாலும் யாரும் அதை நேரடியாக வெளிப்படுத்துவது இல்லை.
உயர்தர வகுப்பை தாண்டித்தான் பள்ளியில் இருக்கும் தாகம் தீர்க்கும் வற்றாத ஜீவநதி போல நம் பள்ளிக்கிணற்றடிக்கு செல்லவேண்டும் !எனவே  சுகி கிணற்றடிக்கு செல்லும் போதெல்லாம் இளவரசியின் உலா போல உயர்தரவகுப்பை ஒரு பார்வை பார்த்துவிட்டுசெல்வாள்.
 உயர்தர வகுப்பில் படிக்கும் பலருக்கு அது அக்கினி வெயிலுக்கு சந்தனம் பூசியது போல சுகமாக இனித்தாலும் அவள் யாரை பார்த்துவிட்டு செல்கின்றாள் என்று ஜனகன் அரச சபைக்கு வில்லுடைக்க  வந்த பட்டத்து இளவரசர்கள் ஜல்லிக்கட்டு காளையைப் போல வில்லுடைக்க முடியாமல் நின்ற இளவரசர்கள் போல குழம்பிப்போய் இருந்தார்கள்.
ஆனால் அவள் பார்வைகள் பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் ரேஞ்சில் ரகுவை நோக்கித்தான் என்று யாருக்கும் தெரியாது
.இதை ரகு அறிந்துகொள்ளவே சில காலம் எடுத்தது.
காதல் ஆன்மாக்களை ஆட்டிப்படைக்கும் மந்திரச்சொல். காதலிக்கப்படுவதும் காதலிப்பதும் ஒரு இனிமையான உணர்வு என்ற கவிஞர்கள் .கூற்றினைப்போல உனக்காக வருந்த ஒருத்தி .
உன் கண்ணில் நீர் வடிந்தால் அவள் கண்ணில் உதிரம் வடியும் இப்படி ஒரு பெண் இருந்தால் உலகில் நீ தான் அதிஸ்டசாலி.ரகுவை பட்டத்து இளவரசன் ஆக்க சுகி விரும்பினால் !
ஆனால் அதை அவள் ரகுவிடம் நேரடியாக சொல்லவில்லை பெண்மைக்கே உரிய நானமாக இருக்கலாம்.இல்லை அதிகாரத்தின் அடக்கு முறையை அவள் நினைத்து இருக்கலாம்
தன் பார்வைகளாலே ரகுவை வசியத்தில் கொள்ளை கொண்டாள்.நாள் தோறும் என் தன் கண்ணில்  நீ பெளர்ணமி என்பது போல இதை ரகு உணர்ந்துகொண்டாலும் என்னைப்போய் இவள் பார்ப்பாளா ??இவள் அதிகார செல்வாக்கு என்ன? சுகியின் சுந்தரவதனம் என்ன?
என்று ரகு முதலில் அவள் தன்னைத்தான் பார்க்கின்றாள் என்று நம்பவேயில்லை .இந்தக்குளத்திலும் கல் எறிவார்களா?? என்ற நினைப்பு  சுகி தன்னை ஏதோ எதேர்ச்சையாக பார்க்கின்றாள் என்று நினைத்தான்.
ஆனால் அது எதேர்ச்சையான பார்வை இல்லை என்பதை அவன் விரைவிலே உணர்ந்து கொண்டான்.விழியில் காதல் மாஜ விஸ்வரூபம் காட்டியது மங்கை சுகியின் வதனத்தில் !
மின்சாரக் கனவு படத்தில் அரவிந்தசாமியை விரும்பாமல் பிரபு தேவா மீது கஜோலுக்கு காதல் வரும் போது அதை அறிந்த பிரபு தேவா பாடுவது போல ஒரு முகாரிப்பாட்டு இருக்குமே ??
என் அழகென்ன என் தொழில் என்ன? ஏன் என்னோடு உன் காதல் உருவானது.?என்று நாசர் கூட பிரபு தேவா புலம்புவது போலத்தான் ரகுவிற்கு அப்போது சிட்டிவேசன் பாடல்.
வன்னிப் பாடசாலைகள்  8.45 க்கு ஆரம்பிக்கும் ஆனால் உயர்தரமாணவர்கள் பெரும்பாலும் பிந்திவருவதையே வழக்கமாக கொண்டிருந்தார்கள்.
பிந்தி வந்தால் 9.00 மணிவரை வெளியில் நிற்கவைத்து விடுவார்கள்.
பின் காலை ஒன்று கூடல் முடிந்ததும் தான் பாடசாலைக்கு உள்ளே எடுப்பார்கள் எப்படியும் 15,20 நிமிடங்கள் பாடசாலை பிரதான வாசலுக்கு வெளியே காத்து இருக்கவேண்டும்.சினிமா தியேட்டரில் டாக்குத்தர் படத்திற்கு விசில் ஊத முண்டிய டிப்பது போல .
அப்படித்தான் ரகு ஒரு நாள் பிந்திவந்த போது சுகியும் பிந்தி வந்திருந்தாள்.
வெளியே காத்திருந்த பதினைந்து இருபது நிமிடங்களில் பெரும்பாலும் சுகி சூரியனை நோக்கும் சூரியகாந்திபோல  பார்த்துக்கொண்டு இருந்தால்.
 இப்போது ரகுவுக்கு தெளிவாக புரிந்துவிட்டது அவள் தன்னைத்தான் பாக்கிறாள் என்று.
அதன் பின் அவள் பாடசாலைக்கு பிந்திவருவதை வழக்கமாக கொண்டுவிட்டாள்.ரகு பார்த்தான் ஏன் பச்சை மட்டை பழுக்கும் வண்ணம்  வில்லங்கத்தை விலை கொடுத்துவாங்குவான் (வட்டுவால்)என்று அவன் நேரத்துக்கு பாடசாலைக்கு வரத்தொடங்கினான்.
 ஆனால் அடுத்த நாள் சுகி நேரத்துக்கு பாடசாலைக்கு வரத்தொடங்கிவிட்டாள்.கோடு போட்டாள் ரோடு போடும் வித்தையில் கண் எதிரே தோன்றினால் கதாநாயகி போல
நூலகம்,சிற்றுண்டிச்சாலை,கிணற்றடி என்று எங்க ரகு போனாலும் சுகியும் அவளது தோழிகளுடன் அங்கு வந்துவிடுவாள்.கண்ணா உன்னைத் தேடுகின்றேன் காதல் குயில் பாடுகின்றேன் உன்னோடு தான் வாழ்க்கை உள்ளே ஒரு வேட்கை  என்ற பாடல் நதியா போல சுகி.
ரகு உயர்தரம்,அவளோ பத்தாம் வகுப்பு இருவருக்கும் இடையில் ஒரே நேரத்தில் பாடவேளைகள் ப்ரீயாக இருக்காது ஆனாலும் அவள் எப்படியோ இவன் போகும் இடம் எல்லாம் வந்துவிடுவாள்.
“இன்னாருக்கு இன்னார் என்று எழுதிவைத்தானே தேவன் அன்று “ஒரு வேளை சுகிக்குத்தான் ரகு என்று தேவன் எழுதிவைத்தாரோ ?என்னவோ அவளது வகுப்பறைக்கு பக்கத்து வகுப்பில் வர்த்தகப் பிரிவை மாற்றிவிட்டது பாடசாலை நிர்வாகம்,
இப்போது சுகிக்கு இன்னும் வசதியாக போய்விட்டது.
ஆசிரியர் வராத பாடவேளைகளில் வகுப்புக்கு முன் நின்று ரகுவையே பார்த்துக்கொண்டு இருப்பாள் .!
 நீ போகும் பாதையில் மனசு போகுதே ராசா என்று ஆனால் ரகுவின் நண்பர்கள் வழமை போல இவள் யாரை பாக்கின்றாள் என்று தங்களுக்குள்ளே குழம்பிபோய் விடுவார்கள் ஆனால் ஓவ்வொறுத்தன் மனசிலும் நினைப்பார்கள் தன்னைத்தான் பாக்கிறாள் என்று.123 படம் போல
இன்றுவரை அவள் யாரை பார்த்தாள் என்று ரகுவை தவிர யாருக்கும் தெரியாது .ஏன் ரகுவின் நெருங்கிய நண்பர்களான சுயன்,அர்ஜுனுக்கு கூட தெரியாது.
அழகு,அந்தஸ்த்து என்பன காதலுக்கு தெரியாது என்பதை சினிமாவில் மட்டும் பார்த்த ரகுவிற்கு தன் கண்முன்னே அது வானவில் போல நிஜமாக நடப்பதை நம்மமுடியவில்லை.
ரகு ஒன்றும் அரவிந்தசாமி இல்லை ஆனால் அவள் நிச்சயம் பாஸ்  ஹாசினிவிட   பேரழகி!
பிரகாசமான அவள் முகம்,காதில் விழும் சுருட்டை முடி,கழுத்துக்கு கீழ்  திமிரும் அவள் பெண்மையின் முன்னழகு மெல்லிய புன் சிரிப்பு உயிரை வாங்கும்  தபூசங்கர் காதல் கவிதை போல  பைத்தியம் கொள்ளும் அவள் பார்வை இதில் ரகு கவரப்பட்டாலும் அவனால் உறுதியான ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை காரணம்.
நூறுபேரை பந்தாடும் ஆயிரம் பேர் வந்தாலும் ஒத்த ஆளாக சமாளிக்கும்  சினிமா ஹீரோ போல இல்லை.ஆசை,பயம் என்று உணர்ச்சிகளுக்கு கட்டுப்பட்ட சராசரி வன்னி மைந்தன்  ரகு.
அவள் ரகுவை பாக்கின்றாள் என்று அவள் வீட்டுக்கு தெரியவந்தால் அப்புறம்
“உன்னோடு நானிருந்த ஓவ்வொறு மணித்துளியும் என் மரணப்படுக்கையிலும் மறவாது கண்மணியேனு “சொல்லிட்டு ரகு மரணப்படுக்கைக்கு போகவேண்டியதுதான் அவள்   குடும்பப் பின்னனி அதிகாரம் அப்படி.

 

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

விழியில் வலி தந்தவனே Copyright © 2015 by தனிமரம் நேசன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book