அன்பு என்ற பாசக்கயிறுக்கு கத்தியாக இருப்பது  அதிகாரம் .இந்த அதிகாரம் பல வழிகளில் கத்தியாக குடும்பம் என்ற வட்டத்தில் இருந்து ஊர் ,அது கடந்து நகரம் போய் ,மாநகரம் கடந்து ,தலைநகரம் கலந்து ,தேசம் என்று காதலுக்கு வரும் கத்திகளின் அதிகாரம் என்ன என்று அறியாதவன் இல்லை ரகு !

எந்த நிலையிலும் தன் ஆசையால் தந்தை என்ற மரகத வீணையை சுரம் பிரிந்த தந்தி போல உடைப்பது சுகிமீதான  காதலும் அதன் பின் விளைவான அதிகார ஆட்சியும் என்று முன்கூட்டிய முன் உணர்வினால் தான்  அன்று பொங்கியது!
ஒருவேளை அவள் சாதாரண ஒரு ஏழைவீட்டு இராஜகுமாரி போல இருந்திருந்தால் ரகுவும் அவள் காதலை ஏற்றுக்கொண்டு இருக்கலாம் !
ஆனால் சும்மா அவளை காதலிக்கின்றேன் என்று சொல்லிவிட்டு பின் குடும்ப பிரச்சனை என்று அவள் விட்டுவிட்டு போனாலோ ,இல்லை அவளது குடும்பம் இவனை தண்டித்தாலோ ,வேதனையும் வலியும் இவனுக்கு மட்டும் இல்லை அந்த அபலைப்பெண்ணுக்கும் சுஜாதாவின் அனித்தாவின் காதல்கள் நூல் போலத்தான் !எனவே அவள் தன்னை பயந்த கோழை என்று நினைதாலும் பரவாயில்லை காதல் தேன் என்ற வலையில் போய் சிலந்திக்கூட்டில் சிக்க அவன் தயார் இல்லை.
இந்த காதல் செய்யும் மாயம்தான் என்ன ஏன் ஒரு சாமானியனுக்கும் அதிகாரவர்கத்தினருக்கும் முடிச்சு போடுகின்றது ஒருவேளை பிரச்சனைகளை பார்க்காத ,பிரிவுகளை கண்டு மனம் உருகி ,மனம் புலம்பி உடைந்த நிலாக்கள் போல காதல் சுவாரஸ்யமாக இருக்காது என்பதா??
கடவுளின் படைப்பில் தான் எத்தனை முடிச்சுக்களை போடுகின்றான் சில முடிச்சுக்கள் அவிழ்க்கப்படுகின்றன. சில வாழ்நாள் முழுவதும் அவிழ்க்கப்படாமலே போய்விடுகின்றன்.
அடுத்துவரும் நாட்களில் ரகுவிற்கு சுகியை பார்க்க பாவமாக இருந்தது .எப்போதும் சந்தோசமாக பூஞ்சோலைப் பூவாக  திரியும் அவள் முகத்தில் ஆங்காடியில் விலைபோகாத இந்தப்பூ விற்பனைக்கு அல்ல !
விலை அதிகம்  என்பது போல சந்தோசம் இல்லை சோகம் குடியேறியிருந்தது.அந்த சோகத்துக்கு தான் தானே காரணம் என்ற குற்ற உணர்வு வேறு அவனுக்கு ,ஆனாலும் ஆரம்பத்திலே  காதல் நதிக்கு அணைகட்டியதில் சிறந்தது என்று நினைத்துக்கொண்டான்.
 முதல் யாசிப்பையும் முதல் ஸ்பரிஸத்தையும் என்றும் மறக்கமுடியாது என்று சொல்வார்கள். அதே போல சுகிக்கு அவனை மறக்கமுடியவில்லை.
இதயத்தில் காதல் தீபம் ஏற்றியவனே
என் உணர்வுகளை பறித்தவனே
ஏன் என்னை சிதைக்கின்றாய்
அனுதினம் உன் முகம் காண தவிக்கும் ஜீவனை
எழு ஸ்வரம் போல
ஏன்  தீண்ட மறுக்கின்றாய்?
என்  தவிப்புக்களை அறிந்தும் ஏன்
அறியாத துவாரகைக் கண்ணன் போல நடிக்கின்றாய்?
நீ இல்லை என்றால் என்
இரவுக்கு ஏது பகல்!
சுவாரசியமானவனே சுகியின் நிலையை
புரிந்துகொள்ளடா!!!
(ரகு சுகியின் காதலை மறுத்த போது சுகி எழுதிய கவிதை  இதை தோழி சுவாதி என்பதால் ரகுவிடம் காட்டிய போது ரகுவினால்   ஒன்றும் சொல்ல முடியவில்லை.)
இதயம் பட முரளி போல இருந்தான்!
அதன் பின் அன்று ஒரு நாள் நல்ல மழைக்காலம் சென்னையில் ஒரு மழைக்காலம் போல வன்னியில்!!
பாடசாலை விடுமுறை நாள் என்பதால் ரகு தனது தந்தைக்கு உதவியாக அவர்களது தாய் பூமியான சந்ததியை வாழவைத்துக்கொண்டு இருக்கும்  வயலுக்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டு இருந்தான்.நேரம் பின்னேரம் ஜந்து இல்லை ஜந்து அரை இருக்கும் மெலிதான கார்கால கும்மிருட்டு  வரும்போது ரகு இந்தியாவில் புகழ்மிக்க மஹேந்திரா தயாரிப்பு உழவு இயந்திரத்தில்தங்கள் வயலில் வேலை செய்யும் சனத்தை ஏற்றிக்கொண்டு சின்னக் கவுண்டர் போல வந்துகொண்டு இருந்தான் !இந்தப் பாதையில் தான் சுகியின் வீடும் இருக்கின்றது!

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

விழியில் வலி தந்தவனே Copyright © 2015 by தனிமரம் நேசன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book