பிடித்தவர்களைக்கண்டால் மனம் பித்துப்பிடித்து பேதலிக்கும் .ஆர்ப்பரிக்கும் இன்பத்தின் வெளிப்பாடு ஆனந்தக்கண்ணீர் விடும்.
 
 அதுவும் பெண்கள் அதிகம் அழுவதில் இன்பம் காணுபவர்கள் நீண்டநாள் காணாத மகன் நேரில் வந்தால் அழுது ஆனந்தப்படும் அன்புத்தாய் உள்ளம் .அதுபோல ரகுவை கண்டது சுகி அழுதாள். 

அன்பைத்தேடும் இதயத்தால் அழுது புலம்பத்தான் முடியும்.

 அதிகாரத்தினால் ஆசைக்காதலை அடைய முடியாது.அதுபோலவே அந்த பெண்ணால் வேறு என்ன செய்யமுடியும்.?

 எல்லாம் இந்த காதல் செய்யும் மாயம் விடாத தூவானம் போல விழியில் வலி!

 ஏன் அழுகிறீங்க சுகி.? என்ன ஆச்சு ?

பார்ரா நாங்க காய்ச்சல் என்று சொன்னம் தானே ! என்ன வானொலி மீள் ஒலிப்பரப்புச் சேவை போல அவள் வேற சொல்லணுமாக்கும் என்று  தோழிகள் கிண்டல் செய்தனர்.

இந்த பூமியில் தீராத இன்னொரு யுத்தம் இந்த மலேரியாக் காய்ச்சல்.

 இங்கு வந்த மூத்த குடியினரின் பலரின் மூடிய கதைகள் கேட்டால் மலேரியாவில் மாண்டு போனவர்கள் வரலாறு சொல்லும் .

இன்னும் நியாயமான முறையில் பதிவு செய்யவில்லை ஈழத்து இலக்கியம் என்பது வேதனையே!!! 


இனவாதிகளின் இடம்பிடிக்கும் செயலில் விரடிவிட்டப்படவர்கள் ஒரு புறம் என்றால் ,

இருக்கும் இடம் விவசாயத்திற்கு உகந்த சூழ்நிலை இல்லாத இடம் என்பதால் !விவசாயம் செய்ய புறப்பட்டு வன்னியில் குடியேற வந்தவர்கள் வரலாற்றை படம் பிடிக்கும் “வெளிக்கிடு விசுவமடுவுக்கு “நாடகம் விளம்பி நிற்கும்.

இன்றும் இந்த நாடகம் வாழம் கலையாக வானொலி நிலையங்களில்!

 அதிலும் வந்து போகும் வசனம் “பிழைக்க வந்தால் பிணி போல மலேரியாக் காய்ச்சல் பரியாரியிடம் போக பையில் பணம் இல்லை வெளியில் இருக்கும் வேப்ப மரத்தில் வேப்பம் பட்டை வெட்டிஅவித்துக்குடித்தும் இன்னும் சுகம் வரவில்லை. இந்தக்கதை எல்லாம் ஊரில் இருக்கும் கொப்பருக்கு எழுதிவிடு சீமாட்டி என்று முன்னாள் தமிழ்வாத்தி படிப்பித்தார். 

முதல் நிலையில் படித்த வகுப்பினர்களுக்கு வெளிக்கிடு விசுவமடு நாடகத்தின் சிறப்பு பற்றி .இது எல்லாம் அடுத்த வகுப்பில் இருந்து கேட்டு ரசித்தவன் ரகு .

அதே காய்ச்சல் தான் இவழுக்குமோ என்று கேட்க நினைத்தாலும் ! இரண்டு மூன்று நாளா ஒரே காச்சல் ரகு உங்களை பத்தி நினைச்சு நினைச்சுதான் எனக்கு காச்சல் .

ஏன் ரகு நான் தொல்லை பண்ணுவதாக சொன்னீங்க? சரியான கவலையா இருந்திச்சு ரகு !. என்று சுகி சொல்லவும் ரகுவின் உதடுகள் பேச வார்த்தை இன்றி  சிலை செதுக்கும் சிற்பியைப்போல சிறிது நேரம் அவளை பார்த்துக்கொண்டு நின்றான்.

 பிறகு போயிட்டு வாரன் என்று சொல்லிவிட்டு சென்று விட்டான். அவன் வாங்கிவந்த நெஸ்டமோல்ட் டின் மட்டும் சுகியுடன் இருந்தது.அவளின் கட்டில் அருகில் இருந்தது அவன் மனம் போல! 


இரண்டு நாள் கழித்து மறுபடியும் பாடசாலைக்கு வந்தாள் சுகி. 

ஈரமான ரோஜாவே மோகினி போல இம்முறை ரகுவாக போய் அவளிடம் கதைத்தான்.அது அவளுக்குநீண்டகாலத்தின் பின் சிறிமா மகள் சந்திரிக்கா மூலம் வெற்றி பெற்ற சுதந்திரக்கட்சியின் ஆட்சி போல அவள் முகத்தில் அந்த பழைய பிரகாசத்தை கண்டான்!


 அதன் பிறகு சுகியை கண்டால் ஜெயலலிதாவை தேடிச்செல்லும் தேசிய திராவிடமுன்னேற்றக்கழக சட்டமன்ற உறுப்பினர் போல ரகுவாக போய் கதைப்பான்.

 அவளும் சந்தோசமாக அவனிடம் உரிமையுடன் கதைப்பாள்,சண்டை போடுவாள் அவள் நினைப்பில் அவன் தன் கலாபக் காதலன். அவன் நினைப்பில் அவள் மேல்” மோகமுள் “நாவல் நாயகி போல ஒரு பரிதாபம்.ஆனால் அது காதலாக மாறும் என்று சுகி காத்திருந்தாள்! 


“என்னிடம் வருவாய் என் யாசகனே ஏங்கித்தவிக்கின்றேன் ஏகாந்தப்பொழுதில் 

 என்னை அறிவாயா ? 
எண்ணும் எழுதும் கவிதைகளில் என்றும் ஏற்றும்!
 என் முதல் பாடகனே !
என் தோழில் சாய்ந்து கொள் என்னையும் சாய்த்துக்கொள்! உன் பொன்வசந்தம்  நான் என்று! எப்போதும் என் எண்ணம் ஏங்கும் .என்று நாம் சேர்வோம் !
எழுதிச் செல்லும் விதியின் வழியில்!

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

விழியில் வலி தந்தவனே Copyright © 2015 by தனிமரம் நேசன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book