இந்த உலகில் அடிப்படைத்தேவையாவன என்று வரையப்பட்ட உணவு அது எங்களுக்குப் பகல் கனவாகிப்போச்சு பயிர் இட்டு பால்குடித்து பலர் சேர்ந்து இருந்த எங்கள் ஊர் பண்பட்ட பண்பாடு வளர்த்த பூமியில் பாவிகள் பொசுபரசுக்குண்டு போட்டு!
விளைநிலத்தையும் விளையாமல் செய்த செயலில் பசிக்கின்றது வயிறு !

பாரதமும் ,சர்வதேசமும் பண்போடு பால் ஊத்த வேண்டாம் .பாழ்பட்ட பூமியில் பயிர் இடும் வசதியை முடிந்தால் முதலில் செய்து தந்து விட்டு வெட்டிப்பேச்சு பேசட்டும் ஈழம் காண்போம் எழுந்து வாங்கள் என்று!

சப்பாத்துக்கால்கள் முதுகில் சங்காரம் செய்தாலும் ,தமிழன் என்று முளி புடுங்கினாலும் , சாகாத விழிகள் மீது இவர்களின் சீட்டுச்சக்கர நாற்காலிக்கனவு என்ன என்று தெரியாத பூமி புத்திரர்கள் இல்லை பண்டார வன்னியன்  வாழ்ந்த் பூமியில் வந்தவர்கள் .

ஆனால் இன்னும் இருக்கவீடு இல்லை, உடுத்த உடையில்லை ,வீதியில்இரந்து  நின்றால் விபச்சாரியாம்!

சமூகம் கெட்டு விட்டுதாம் விளம்பரம் செய்யும் ஊடக விபச்சாரர்களுக்கு விழியில்லை ;வீதியில் தான் பிறந்த ஊரில் இல்லாத வீட்டைப்பார்த்து கதறும் தாய் .அவள் பால் ஊட்ட அழும் பிள்ளைக்கு பசிக்கு  உணவில்லாத நிலையை பத்திரிகையில் எழுதவேண்டியர்கள் பந்தி எழுதுகின்றது. பத்தினியா ?பாலியல் தொழிலாளியா ??என்று ஊத்திக்குடித்துக்கொண்டு ஊர்கதை பேசுவோர் முதலில் உடுக்க நல்ல உடை வாங்கித்தந்துவிட்டு  .

தங்கள் மானம். மரியாதை என்று ஊர்ப்பற்று என்று  விளம்பரம் செய்யட்டும்.
அண்ணன் எப்ப காலியாவான் திண்ணை எப்ப காலி ஆகும் என்று எதிர்பார்த்தவர்கள் எல்லாம் அயல் நாடும், அடுத்த கட்டமும் ,என்று ஆராய்கின்ற கூத்தணியும் இந்த தேசத்தில் தான் கூத்தாடுகின்றது!

எங்கள் வாழ்வு கெடுத்தவனுக்கே எங்கள் ஓட்டு என்ற கோசம் போட்ட கோமாளிகள்  எல்லாம் எங்களை வைத்து வியாபரம் செய்கின்றது.

 

ஐயாமாரே  நாங்களும் நல்லாக வாழவேண்டும் மற்ற நாட்டவர்கள் போல உழுத பூமியில் எத்தனை எலும்புக்கூடு இன்னும் உக்காமல் இருக்கு. அந்த இடத்தில் எல்லாம் உண்மை பேசு என்று போதித்த புத்தன் சிலைகள் .

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

விழியில் வலி தந்தவனே Copyright © 2015 by தனிமரம் நேசன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book